ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் ஒரு கிராம மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் ஒரு கிராமமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மேலும் ஒரு கிராம மக்கள் போராட்டம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அந்த கிராம மக்கள் 53-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தலைமை நிலைய செயலாளர் வக்கீல் சுப்பிரமணியன் தலைமையில் பேரவையினர் அ.குமரெட்டியபுரத்துக்கு வந்தனர். அவர்கள் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷங்களும் எழுப்பினர்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி அமைந்து உள்ள கிராமங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக போராட்டம் தொடங்கியது. அதன்படி பண்டாரம்பட்டி மக்கள் அந்த பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 5-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வடக்கு சங்கரப்பேரி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர் ஆகிய கிராமமக்களும் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு கிராமமாக சில்வர்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று போராட்டம் தொடங்கப்பட்டது. தூத்துக்குடி அருகே உள்ள சில்வர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்கள் சில்வர்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று மாலையில் போராட்டத்தை தொடங்கினர். அங்கு திரண்டு இருந்த மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் எம்.ஜி.ஆர். பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவின் பராமரிப்பு பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த பூங்காவின் பெயர் பலகையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பெயரும் எழுதப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மக்கள் மேம்பாட்டு கழக நிறுவனர் வக்கீல் அதிசயகுமார் தலைமையில் அந்த அமைப்பினர் ஸ்டெர்லைட் ஆலை பெயரை பெயிண்ட் அடித்து அழித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஸ்டெர்லைட் பெயர் பலகையை அழிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com