

தேனி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான தேயிலை, ஏலக்காய், காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் கூலி வேலைக்காக தேனி மாவட்டத்தில் போடி, ராசிங்காபுரம், சிலமலை, தேவாரம், கோம்பை, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.
இந்த தொழிலாளர்கள் அவர்களின் ஊர்களில் இருந்து ஜீப்களில் அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக கம்பம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜீப்கள் உள்ளன. தொழிலாளர்களிடம் இருந்து தினமும் வாடகை பெற்றுக் கொண்டு அவர்களை சுமார் 50 கி.மீ. இருந்து 100 கி.மீ. வரை உள்ள தோட்டங்களுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.
ஊரடங்கால் பாதிப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநில எல்லை மூடப்பட்டதால் தொழிலாளர்கள் 2 மாதங்களாக வேலைக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். அதுபோல், ஜீப் டிரைவர்களும் ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக தங்களின் ஜீப்களை இயக்க முடியாமல் வீடுகளிலும், ஆங்காங்கே வாகன நிறுத்தங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர்.
தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல முடியாததால் ஜீப் டிரைவர்கள் வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றனர். பலரும் தெரிந்தவர்களிடம் கடன் பெற்ற பணத்தில் ஜீப் வாங்கி இயக்கி வந்தனர். கடனை திருப்பி செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாழ்வாதாரம் இழந்துள்ள ஜீப் டிரைவர்களுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.