ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்: சாராய விற்பனை தலை தூக்கியது - திருச்சியில் 3 பேரல்களின் ஊறல் அழிப்பு

ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சாராய விற்பனை தலை தூக்கி உள்ளது. திருச்சியில் 3 பேரல்களின் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடல்: சாராய விற்பனை தலை தூக்கியது - திருச்சியில் 3 பேரல்களின் ஊறல் அழிப்பு
Published on

திருச்சி,

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நாள் முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. திருச்சி மாநகர் மற்றும் மாவட்டங்களில் 125-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள மதுபார்களும் மூடப்பட்டு விட்டன. இதனால், மதுபிரியர்கள் தவித்து வருகிறார்கள்.

மது கிடைக்காததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைக்காக சேவிங் லோசனை குடித்ததால் 3 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு எப்போது முடியும்? என எண்ணி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நாட்களை மது பிரியர்கள் எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு முடிய இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் கிராமப்புறங்களில் சாராய விற்பனை தலைதூக்க தொடங்கி விட்டது. பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதுபோல, சாராயம் வடித்தாவது குடிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். குடி மகன்களிள் நிலை அறிந்து கிராமங்களில் வீடுகளிலேயே சாராய ஊறல் வைத்து சாராயம் வடிக்க சிலர் தொடங்கி விட்டதாக ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராம்ஜிநகர் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். போலீசாரை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். வீட்டை சோதனை செய்தபோது 3 பெரிய பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கான ஊறல் போடப்பட்டு இருந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றி அழித்தனர். சாராயம் வடிக்க முயற்சித்த வீட்டு உரிமையாளரை போலீசார் தேடி வருகிறார்கள். சாராய ஊறல் போட்ட வீடு, எடமலைப்பட்டி புதூர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என தெரியவந்ததால், மேற்கொண்டு வழக்கு விசாரணையை எடமலைப்பட்டி புதூர் போலீசார் நடத்தி வருகிறார்கள்.

இதுபோல திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வாழும் சிலர் தாங்களே தேவையான சாராயம் காய்ச்ச முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முகாம் வளாகத்தில் உள்ள வீடுகளுக்கு பின்புறம் சாராய ஊறல் போட்டனர். இதுகுறித்து அறிந்த மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் அகதிகள் முகாமிற்கு சென்றனர்.

அப்போது அங்கு வீடுகளுக்கு பின்னால் சாராய ஊறல் போட்டு மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சாராய ஊறல் அங்கேயே போலீசாரால் அழிக்கப்பட்டது.

சாராய ஊறல் போட்டதாக அகதிகள் முகாமை சேர்ந்த நியூட்டன் (வயது 48), அந்தோணி(46), சூசைப்பிள்ளை (58), ராபின்சன் (42) மற்றும் நடேசய்யர் (57) ஆகிய 5 பேரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் திருட்டுத்தனமாக யாரேனும் சாராயம் காய்ச்சுவதாக தெரிந்தால் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பொதுக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com