எடியூரப்பாவின் மகனாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் எனது தலையீடு இல்லை: விஜயேந்திரா

முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனாக இருந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் எனது தலையீடு எதுவும் இல்லை என்று விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
விஜயேந்திரா
விஜயேந்திரா
Published on

விஜயேந்திரா சாமி தரிசனம்

பெங்களூருவில் உள்ள கவிகங்காதரேஷ்வரர் கோவிலில் பா.ஜனதா துணை தலைவர் விஜயேந்திரா நேற்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். பின்னர் அவரிடம், ஆட்சி அதிகாரத்தில் உங்களது தலையீடு அதிகஅளவு இருப்பதாக எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் குற்றச்சாட்டு கூறுவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து விஜயேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது தலையீடு இல்லை

பலமுறை இந்த விவகாரம் தொடர்பாக பேசப்பட்டு வந்துள்ளது. யாரோ ஒருவர் என் மீது கூறும் குற்றச்சாட்டு குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. பா.ஜனதா தொண்டர்களின் உழைப்பால், மாநிலத்தில் பா.ஜனதா அரசு நடைபெற்று வருகிறது. நான் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் தான். அதுபோல, பா.ஜனதா கட்சியின் துணை தலைவர், ஒரு தொண்டனாகவும் இருக்கிறேன். கட்சியில் என்னுடைய நிலைமை, எனக்கு இருக்கும் வரம்பு பற்றி நன்கு தெரியும். அதனை நான் ஒரு போதும் மீறியதில்லை.

ஒரு எம்.எல்.ஏ.வை மந்திரியாக்கவோ, கட்சியில் இருப்பவர்களின் மற்ற பணிகளில் நான் தேவையில்லாமல் தலையீடுவதும் இல்லை. முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனாக இருந்தாலும், அவரது பணிகளிலோ அல்லது ஆட்சி அதிகாரத்திலேயோ எனது தலையீடு எதுவும் இல்லை. கட்சி தலைமை எனக்கு வழங்கும் பணிகளை மட்டுமே நான் செய்து வருகிறேன். மற்ற பிரச்சினைகளில் தலையிடுவது இல்லை.

எனக்கு எதிராக பேசுபவர்...

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தவும், கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே பணியாற்றி வருகிறேன். பசவகல்யாண் தொகுதியில் நான் போட்டியிடுவது பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. மஸ்கி தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல் பொறுப்பாளராக என்னை, மாநில தலைவர் நியமித்துள்ளார். அந்த தொகுதியில் பா.ஜனதா வெற்றிக்காக பாடுபடுவேன். இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. எதற்காக, என் மீது குற்றச்சாட்டு கூறுகிறார் என்பது தெரியவில்லை. அவரது பேச்சுக்கு அதிக

முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை.

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி பேசி வருவதால், அவருக்கு பா.ஜனதா மேலிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி வைத்துள்ளது. அவர் மீது கட்சி மேலிடம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது பற்றி எனக்கு தெரியாது. என் மீது நம்பிக்கை வைத்து கட்சி வழங்கும் பணிகளை செய்து வருகிறேன். கட்சி கொடுக்கும் எந்த வேலையையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். அது எனது கடமையாகும். எனக்கு எதிராக பேசுபவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை. என்னுடைய வேலையை நான் சரியாக செய்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com