

கோவை,
கோவை மாநகர பகுதியில் அதிகளவில் செல்போன் பறிப்பு, பணம் ஜேப்படி நடக்கும் இடமாக இருப்பது காந்திபுரம் டவுன் மற்றும் மத்திய பஸ்நிலையங்கள்தான். இந்த பஸ்நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். கண்காணிப்பு பணியில் ஈடுபட போதிய அளவுக்கு போலீசார் நியமிக்கப்படாததால் தினமும் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இதில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் மட்டுமே போலீசில் புகார் செய்கிறார்கள். அந்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பெரும்பாலானவர்கள் புகார் செய்வது இல்லை. இதனால் திருட்டு ஆசாமிகள் எவ்வித தடையும் இல்லாமல் தங்கள் வேலையை அரங்கேற்றி வருகிறார்கள். தற்போது அவர்கள் போலீஸ் உயர் அதிகாரியிடமே தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன் (வயது 53). இவர் கோவை கணபதியில் தனது குடும்பத்துடன் தங்கி உள்ளார். ஒரு வழக்கு தொடர்பாக கோவை வந்த அவர் ஈரோடு செல்வதற்காக நேற்று காலை 9 மணிக்கு காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் வந்தார்.
அப்போது அவர் சீருடை அணியவில்லை. சாதாரண உடையில் இருந்தார். அந்த நேரத்தில் ஈரோடு செல்ல ஒரு பஸ், பஸ்நிலையத்தை விட்டு வெளியே வந்து நின்றது. அந்த பஸ்சில் பலர் முண்டியடித்து ஏறினார்கள்.
உடனே ராதாகிருஷ்ணனும் ஓடிச்சென்று அந்த பஸ்சில் ஏறினார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்திய மர்ம ஆசாமி ஒருவர், ராதாகிருஷ்ணனிடம் இருந்த செல்போனை திடீரென்று பறித்தார். அதை அவர் கவனிக்கவில்லை. பஸ்சுக்குள் ஏறியபோதுதான், தனது செல்போனை மர்ம நபர் பறித்து சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.17 ஆயிரம் ஆகும்.
உடனே அவர் எதிரே உள்ள காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு நபர் ராதாகிருஷ்ணனிடம் இருந்து செல்போனை பறிப்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அந்த நபரின் முகம் சரியாக தெரியவில்லை.
இதுகுறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், அந்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். பஸ்நிலையத்தில் போலீஸ் உயர் அதிகாரியிடமே செல்போனை பறித்து செல்லும் அளவுக்கு மர்ம ஆசாமிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டதால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.