நாகர்கோவிலில் கோவை பயணிகள் ரெயில் என்ஜின் தடம் புரண்டது

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரெயில் என்ஜின் திடீரென தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவிலில் கோவை பயணிகள் ரெயில் என்ஜின் தடம் புரண்டது
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கும் பயணிகள் ரெயில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரெயில் காலை 7.10 மணிக்கு புறப்படும். கோவை பயணிகள் ரெயில் எப்போதும் 2வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு செல்வது வழக்கம். எனவே நேற்றும் ரெயில் பெட்டிகள் 2வது பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதன் பிறகு பெட்டிகளுடன் என்ஜினை இணைக்கும் பணி நடந்தது. இதற்காக ரெயில் என்ஜின் யார்டில் இருந்து எடுத்து வரப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலைய யார்டில் இருந்து எடுத்து வரும் என்ஜினை 2வது பிளாட்பாரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் எனில் முதல் பிளாட்பாரத்தில் ஊட்டுவாழ்மடம் வரை சென்று, பின்னர் தான் 2வது பிளாட்பாரத்தில் இணைய முடியும்.

எனவே கோவை பயணிகள் ரெயில் என்ஜினும் நேற்று 1வது பிளாட்பாரத்தில் இருந்து ஊட்டுவாழ்மடம் வரை சென்று 2வது பிளாட்பாரத்தில் இணைந்தது. பின்னர் ரெயில் பெட்டிகளுடன் இணைப்பதற்காக என்ஜின் கொண்டு வரப்பட்டது. ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கிராசிங் அருகே வந்த போது திடீரென ரெயில் என்ஜின் தடம் புரண்டது. சில சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், உடனே என்ஜினை நிறுத்தினார். பின்னர் இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனையடுத்து தடம் புரண்ட ரெயில் என்ஜினை மீட்டு தண்டவாளத்தில் சேர்க்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கினர். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து மீட்பு எந்திரம் கொண்டு வரப்பட்டு பணிகள் நடந்தன. அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த பணிகள், மதியம் 12.30 வரை அதாவது 7 மணி நேரம் நடந்தது. அதன் பிறகு தடம் புரண்ட ரெயில் என்ஜின் மீண்டும் தண்டவாளத்தில் சேர்க்கப்பட்டது.

இதற்கிடையே கோவை பயணிகள் ரெயில் பெட்டிகளில் மாற்று என்ஜின் இணைக்கப்பட்டு அந்த ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டது. வழக்கமாக 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் நேற்று 2 மணி நேரம் தாமதமாக அதாவது 9.10 மணிக்கு புறப்பட்டது.

கோவை பயணிகள் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் நாகர்கோவில் ரெயில் நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. ஏராளமான பயணிகள் திரண்டு வந்து தடம் புரண்ட என்ஜினை பார்த்தனர். தடம் புரண்ட என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜின் பொருத்தும் பணிகள் நடந்ததால் நாகர்கோவில் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலும் தாமதமாக புறப்பட்டன.

அதாவது குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். ஆனால் நேற்று இந்த ரெயில் 2 மணி நேரம் தாமதமாக காலை 7.45 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இதேபோல் காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலும் 2 மணி நேரம் தாமதமாக காலை 8.30 மணிக்கு புறப்பட்டது. ரெயில்கள் தாமதத்தால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com