

ஈரோடு,
கோவை சூலூரை சேர்ந்தவர் கந்தவேல். சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரமாபிரபா.
இவர்களுடைய ஒரே மகன் அருண் (வயது 14). வண்டலூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அருண் எந்தநேரமும் செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டதால் அருண் விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டார்.
மகனின் நிலையை கண்ட கந்தவேல் அருணை மனநல டாக்டரிடம் அழைத்து சென்றார். அப்போது டாக்டர்கள் அருணுக்கு பிடித்த இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்றார்கள். அருணுக்கு பறவைகள் என்றால் பிரியம். அதனால் பறவைகள் அதிகம் காணப்படும் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே கள்ளிபாளையத்தில் உள்ள தன்னுடைய நண்பரின் தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்தனர்.
மேலும் அவ்வப்போது சூலூரில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கும் அருணை அவரது தந்தை அழைத்து சென்று சிகிச்சையும் அளித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை கந்தவேலும், ரமாபிரபாவும் புஞ்சைபுளியம்பட்டிக்கு சென்றார்கள்.
அருண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பப்ஜி விளையாட முடியவில்லையே என்று மீண்டும் ஏங்கிய அருண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.
உடனே வீட்டின் சிமெண்டு ஓடுகள் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு குழாயில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பிய கந்தவேலும், ரமாபிரபாவும் மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார்கள்.
இதுபற்றி உடனே புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பப்ஜி விளையாட முடியாததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது அவருடைய உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.