கோவை உக்கடம், வடவள்ளி பகுதிகளில் மேம்பாலம்-குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு

கோவை உக்கடம் மேம்பாலம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
கோவை உக்கடம், வடவள்ளி பகுதிகளில் மேம்பாலம்-குடிநீர் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் நேரில் ஆய்வு
Published on

கோவை,

கோவை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.121 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் இடையேயான உயர்மட்ட மேம்பால பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இப்பாலம், ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரையிலான 1.34 கிலோ மீட்டர் நீளமுள்ள 4 வழி ஓடுதளம், உக்கடம் சந்திப்பு முதல் ஒப்பணக்கார வீதி வரை 345 மீட்டர் நீளமுள்ள இருவழி இறங்கு ஓடுதளம், டவுன்ஹால் முதல் உக்கடம் சந்திப்பு வரை 284 மீட்டர் நீளமுள்ள இருவழி ஓடுதளம் என மொத்தம் 1.970 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும்.

இப்புதிய பாலம் அமைவதின் மூலம் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, டவுன்ஹால் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாநகர மத்தியப்பகுதிகளில் பெருமளவில் போக்குவரத்து குறையும்.

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேரூர் புறவழிச்சாலை ஓரத்திலுள்ள உக்கடம் பெரிய குளத்தின் கரையை ரூ.39 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். குளங்கள் மேம்பாட்டு பணிக்கான மாதிரி வடிவங்களையும் அவர் பார்வையிட்டார்.

கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ரூ.108 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடவள்ளியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மரக்கன்றையும் அங்கு நட்டார்.

முதல்-அமைச்சருக்கு கோவை கரும்புக்கடை பகுதியிலும், பி.என்.புதூர் பகுதியிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்தாலும் சாதாரண மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆனால் வேண்டும் என்றே எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அதனை தவிடுபொடியாக்குவேன். தி.மு.க. ஆட்சியில் 100-க்கு 20 பேர் உயர் கல்வி படிக்கும் நிலைமை இருந்து வந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வி வளர்ச்சிக்காக புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வசதியில்லாத மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கி உயர்கல்வி கற்க வழிவகை செய்தார். கோவை லாலிரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும். மக்கள் எண்ணும் எண்ணங்களை நிறைவேற்றுவதே அ.தி.மு.க. அரசின் பணி. இந்த அரசு இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. மத்திய அரசு ஹஜ் மானியம் ரத்து செய்தும் கூட தமிழக அரசு ரூ.6 கோடியை ஹஜ் பயணிகளுக்கு மானியமாக வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- கோவை மாவட்டம் தொழில்துறை, விவசாயத்தில் முன்னணியில் உள்ளது. கோவை நகர வளர்ச்சிக்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். மேம்பாலங்கள், கூட்டு குடிநீர் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் மூலம் கோவை நகரம் மேலும் வளர்ச்சி அடையும். அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளது. கோவை மாவட்டத்துக்கு திட்டங்களை வாரி வழங்கும் முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

முதல்-அமைச்சரின் ஆய்வின்போது கலெக்டர் ஹரிகரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், எம்.பி.க்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண் குமார், அம்மன் அர்ச்சுனன், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்ராஜ், கனகராஜ், கஸ்தூரிவாசு, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜூ, முன்னாள் எம்.பி. தியாகராஜன், என்ஜினீயர் சந்திரசேகர், நா.கருப்புசாமி, பி.கணேசன், சிவக்குமார், ரமேஷ், ராசி பி.சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com