சுருக்கு-இரட்டைமடி வலைகளை தடை செய்யாவிட்டால் போராட்டம்; மீனவ கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

சுருக்கு-இரட்டைமடி வலைகளை தடை செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவது என்று மீனவ கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுருக்கு-இரட்டைமடி வலைகளை தடை செய்யாவிட்டால் போராட்டம்; மீனவ கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்
Published on

பொறையாறு,

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடல் வளத்தை பாதுகாக்கக்கோரி மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர்.

இதில் தரங்கம்பாடி, சின்னமேடு, சின்னங்குடி, தாழம்பேட்டை,பெருமாள்பேட்டை, வெள்ளக்கோவில், குட்டியாண்டியூர், கூழையாறு, கொட்டாய்மேடு, பழையாறு, தொடுவாய்,கொடியம்பாளையம், சாவடிகுப்பம்,நாயக்கர்குப்பம், மடத்துகுப்பம், வானகிரி உள்ளிட்ட 26 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

மத்திய,மாநில அரசுகள் தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக மோட்டார் எந்திரம் பொருத்தப்பட்ட படகு ஆகியவை மூலம் மீன்பிடி தொழில் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) நாகை கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிப்பது.

அரசின் தடையை மீறி சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக மோட்டார் எந்திரம் பொருத்தப்பட்ட படகு மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபடுவதை கண்டித்தும், இதனை அரசு தடை செய்யாவிட்டால் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதி மீனவர்கள் இணைந்து மீனவ கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது அல்லது தொழில் மறியலில் ஈடுபடுவது.

தடை செய்யப்பட்ட சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை, அதிவேக மோட்டார் பொருத்திய எந்திரங்கள் தொடர்ந்து பயன் படுத்தினால் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகாவை சேர்ந்த கிராமத்திற்கு 2 நபர்கள் வீதம் தேர்ந்தெடுத்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com