அதிக வட்டி தருவதாக கூறி வசூல், நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - நிர்வாக இயக்குனர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

கோவையில் நிதிநிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்து ரூ.10 கோடி மோசடி செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அதிக வட்டி தருவதாக கூறி வசூல், நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி - நிர்வாக இயக்குனர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
Published on

கோவை,

கோவையை அடுத்த சூலூர் பொன்னாக்காணியை சேர்ந்தவர் ஜி.ரமேஷ் (வயது 31). இவர் கோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரெடிங் சொலியூசன் என்ற பெயரில் கடந்த 2017-ம் ஆண்டில் நிதி நிறுவனம் தொடங்கினார். இதில் இருகூரை சேர்ந்த கனகராஜ் (21), கோவைப்புதூரை சேர்ந்த ஜாஸ்கர் ஆகியோர் இயக்குனராகவும், ஊட்டியை சேர்ந்த சுனில்குமார் பொதுமேலாளராகவும் இருந்தனர்.

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் அதிக வட்டியும், குறிப்பிட்ட மாதங்கள் கழித்து முதலீடு செய்த பணத்தை திரும்ப செலுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை நம்பி கோவை, திருப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்தனர். அவர்க ளுக்கு குறிப்பிட்ட மாதங்கள் மட்டும் வட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் பணத்தை திரும்பக் கொடுக்க வில்லை.

இது தொடர்பாக மருதமலை அருகே உள்ள சிவதான்யாபுரத்தை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் ரமேஷ் (30) கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த நிறுவனத்தில் சோதனை செய்ய கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அனுமதி பெற்று சோதனை நடத்தினார்கள்.

இதில் இந்த நிறுவனம் ஏராளமானோரிடம் பணம் வசூலித்து விட்டு அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள். இது தொடர்பாக அந்த நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் ஜி.ரமேஷ், இயக்குனர்கள் கனகராஜ், ஜாஸ்கர், பொதுமேலாளர் சுனில் குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் 4 பேரும் தலைமறைவாகிவிட்டனர். எனவே அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

இந்த நிதி நிறுவனம் பிரீடம், ஆன்லைன், மேனுவல், பிக்சடு ஆகிய 4 திட்டங்களில் பணம் செலுத்தலாம் என்று அறிவித்தது. இதில், பிரீடம் திட்டத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 20 மாதத்துக்கு மாதந்தோறும் ரூ.2,500 வட்டியும், பின்னர் ரூ.50 ஆயிரம் திரும்ப வழங்கப்படும் என்றும், ஆன்லைன் திட்டத்தில் 10 மாதத்துக்கு மாதந்தோறும் 10 சதவீத வட்டியும், பின்னர் அசலும், மேனுவேல் திட்டத்தில் 12 மாதத்துக்கு மாதந்தோறும் 12 சதவீத வட்டியும், பின்னர் அசலும், பிக்சடு திட்டத்தில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் ஒரு வருடம் கழித்து ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தனர்.

இதை நம்பி 1000-க்கும் மேற்பட்டவர்கள் மொத்தம் ரூ.10 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்து உள்ளனர். அவர்களுக்கு குறிப்பிட்ட மாதம் வரை வட்டி வழங்கப்பட்டது. பின்னர் அதுவும் வழங்கப் பட வில்லை. எனவே பொதுமக்களை ஏமாற்றி ரூ.10 கோடியை மோசடி செய்துவிட்டு தலைமறைவான 4 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக வங்கிகள் கொடுக்கும் வட்டியை விட அதிகமாக வட்டி கொடுப்பதாக கூறுவதை நம்பக் கூடாது. ஆனால் கவர்ச்சிகரமான திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யுங்கள் என்று யாராவது கேட்டால் பொதுமக்கள் யாரும் பணம் செலுத்த வேண்டாம். அப்படி செலுத்தினால் நீங்கள் கண்டிப்பாக ஏமாற்றப்படுவீர்கள். கோவை பீளமேட்டில் உள்ள இந்த நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் எங்களிடம் அதற்கான ஆதாரத்துடன் புகார் செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com