அன்னதானம் சாப்பிட சென்றபோது அவமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கலெக்டர் ஆறுதல்

அன்னதானம் சாப்பிட சென்றபோது அவமதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கே கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அன்னதானம் சாப்பிட சென்றபோது அவமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கலெக்டர் ஆறுதல்
Published on

அன்னதானம் சாப்பிட விடாமல்...

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 24-ந்தேதி அன்னதானம் சாப்பிட சென்ற ஒரு குறிப்பிட்ட சமூதாயத்தை சேர்ந்த பெண்ணை கோவில் நிர்வாகத்தினர் அவமானப்படுத்தி, அன்னதானம் சாப்பிட விடாமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

அந்த பெண் தான் அவமானப்பட்ட நிகழ்வை மனகுமுறலுடன் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இவை முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து அறிந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மாமல்லபுரம் வந்து எந்த கோவிலில் அந்த சமுதாய பெண் அவமதிக்கப்பட்டாரோ அதே கோவிலுக்கு அழைத்து அந்த சமுதாய பெண்களுடன் சமபந்தி விருந்தில் அமர்ந்து உணவருந்தினார். பிறகு முதல்-அமைச்சரிடம் உங்கள் குறைகளை தெரிவித்து உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக அமைச்சர் அவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.

கலெக்டர் அறுதல்

இதையடுத்து தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறி அவரது குடும்பத்தினர் பற்றியும், உங்கள் பகுதிக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த பெண் உள்ளிட்ட அங்கு இருந்தவர்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, ரேஷன் கடை, குடிதண்ணீர் வசதி, குடியிருப்பு நிலபட்டா வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கேட்டனர்.

அப்போது கலெக்டர் ராகுல்நாத், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. தர்ஹிதாபர்வீன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், மாமல்லபுரம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். மாவட்ட கலெக்டரே தங்களை நாடி வந்து குறைகளை கேட்டுள்ளது தங்களுக்கு மிக்க நெகிழ்ச்சியை தந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com