

திருவள்ளூர்,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த்தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை முதல் அனுமதி
இந்தநிலையில் அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டி நடைமுறைகளை பின்பற்றி, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவலாயங்களிலும் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் நாளை(திங்கட்கிழமை) முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
எனவே கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்து, ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 044-27664177 மற்றும் 9444317862 என்ற வாட்ஸ்-அப் எண் ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.