சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு: வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது, ஒரு வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலத்தில் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு: வீட்டு உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Published on

சேலம்,

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் டெங்கு நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட அழகாபுரம், ரெட்டியூர், முன்னாள் படைவீரர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர், 17-வது வார்டு அலுவலக வளாகத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.

மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தெருக்களிலும், ரெட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பணிகளை பார்வையிட்டார். அழகாபுரம் பகுதியில் ஒருவர் புதியதாக வீடு கட்டும் பணியை ஆய்வு செய்தபோது, அங்கிருந்த தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் லார்வாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த கலெக்டர், அங்கு தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் ரெட்டியூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ராமன், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஆஸ்பத்திரிக்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயம் நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி மாநகர் நல அலுவலர் பார்த்திபன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் நிர்மல்சன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com