நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 110 பேர் கைது

நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் 110 பேர் கைது
Published on

நாகப்பட்டினம்,

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவா, மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட பொருளாளர் சிவனருட்செல்வம், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலையா, பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் 1.1.2016 முதல் ஓய்வுபெறும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் பணிக்கொடையும், மாதம் ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.300 வீதம் மாதம் 2 முறை சுத்தம் செய்வதற்கு ரூ.600 வழங்க வேண்டும். 10.5.2000-க்கு பிறகு பணியில் சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியம் ரூ.2 ஆயிரமும், 6-வது ஊதியக்குழுவில் ரூ.40-ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாகூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 110 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், சி.ஐ.டி.யூ. ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com