கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அதிகாரிகள் முற்றுகை 77 பேர் கைது

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் 77 பேரை போலீசார் கைது செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தை கிராம நிர்வாக அதிகாரிகள் முற்றுகை 77 பேர் கைது
Published on

புதுக்கோட்டை,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று அந்த சங்கத்தினர் புதுக்கோட்டை பி.எல்.ஏ. ரவுண்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் உலகநாதன், பொரு ளாளர் வசந்தகுமார் முன்னிலை வகித்தனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். உட்பிரிவு பட்டா மாறுதல் உள்பட அனைத்து விதமான பட்டா மாறுதல்களுக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளின் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும். கிராம நிர்வாக அதிகாரியின் கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.

கிராம நிர்வாக அதிகாரியின் பதவியை மீண்டும் தொழில்நுட்ப பதவியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கிராம நிர்வாக அதிகாரிகள், கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தரையில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினார்கள்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்ரகுமான், பழனியம்மாள் ஆகியோர் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் 77 பேரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com