குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த கிராம மக்கள்

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த கிராம மக்கள்
Published on

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதையடுத்து சுமார் 2 மாதத்துக்கு பிறகு நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது திண்டுக்கல் அருகேயுள்ள அனுமந்தராயன்கோட்டை கிராமத்தின் ஏ.டி.காலனியை சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன், ஊர்வலமாக வந்தனர். பின்னர் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு 50 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

அதை குடிநீராக பயன்படுத்த முடியவில்லை. இதனால் ஒரு குடம் குடிநீர் ரூ.10-க்கு வாங்கி வருகிறோம். தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுக்கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அல்லது ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும். இதர பயன்பாட்டுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் தேசிய நதிநீர் இணைப்பு மக்கள் இயக்கத்தின் தலைவர் சின்னராஜ் கொடுத்த மனுவில், பழனி அருகேயுள்ள அமரபூண்டி ஊராட்சி கஞ்சநாயக்கன்பட்டியில் 1,500 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் அமரபூண்டி, ரூக்குவார்பட்டி பள்ளிக்கூடத்தான்வலசு ஆகிய பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பண்ணைக்காடு ஊராட்சி நேரியபுரம் சலவை தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், பண்ணைக்காடு காமராஜபுரம் ஆற்றில் பல ஆண்டுகளாக துணிகளை சலவை செய்து வருகிறோம். இந்த நிலையில் ஆற்றுக்கு செல்லும் பாதையை மறித்து கழிப்பறை கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால் சலவை செய்வதற்கு ஆற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலக்கும் நிலை உருவாகும். எனவே, கழிப்பறையை வேறு இடத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com