

திருச்சி,
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.யும், சங்க மாநில தலைவருமான பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுரேஷ், துணை பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் முருகன் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.
தமிழகத்தில் சுமார் 50 லட்சம் கட்டிட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் 28 லட்சம் பேர் தான் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக தங்களது பெயரை பதிவு செய்து உள்ளனர். இதிலும் சுமார் 10 லட்சம் தொழிலாளர்களின் பதிவு புதுப்பிக்கப்படாமல் காலாவதியாகி உள்ளது. இதற்கு உறுப்பினர் பதிவில் அரசு கடைபிடித்து வரும் விதிமுறைகள் தான் காரணம் ஆகும். தொழிலாளர்களே நல வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்யவேண்டும், புதுப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் தொழிற்சங்கங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன.
கட்டுமான தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு 24 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளது. நலவாரியத்தினால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் பெருமளவில் கட்டிட தொழிலாளர்களுக்கு போய் சேரவில்லை. இது சம்பந்தமாக தொடர்ந்து போராட்டம் நடத்தியும் தமிழக அரசு தொழிலாளர்களை கண்டு கொள்ளாத நிலை தான் நீடிக்கிறது.
விபத்தினால் ஏற்படும் கட்டிட தொழிலாளரின் மரணத்திற்கு ரூ.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படவேண்டும். ஆனால் எல்லா இறப்புக்கும் இந்த தொகை வழங்கப்படுவது இல்லை. கட்டிட பணியின்போது சம்பவ இடத்திலேயே இறந்தால் மட்டுமே ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாலோ, சிகிச்சைக்கு பின் இறந்தாலோ வழங்கப்படுவது இல்லை. கட்டிட வேலைக்கு செல்லும் போது விபத்தில் இறந்தாலோ அல்லது வேலை முடிந்து வாகனங்களில் செல்லும் போது இறந்தாலோ முழு இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளோம்.
தற்போது வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1000 போதாது. அதனை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும், பெண் கட்டிட தொழிலாளர்களுக்கான பேறுகால பலனை 6 மாத சம்பளமான ரூ.90 ஆயிரமாக வழங்கவேண்டும், 60 வயது நிறைவடைந்த கட்டிட தொழிலாளர்களுக்கு பொருந்தாத காரணங்களை காட்டி ஓய்வூதியம் மறுக்கப்பட கூடாது, மணல் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொழிலாளர்களின் கருத்து அறிந்து வருகிற ஜூலை மாதம் 31-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் மனு கொடுக்க இருக்கிறோம். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை திருத்தி அமைக்க வேண்டும் என கோரி வருகிற அக்டோபர் மாதம் 23-ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களையும் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.