ஒடுகத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஒடுகத்தூர் பேரூராட்சியில் செய்து வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஒடுகத்தூர் பேரூராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு
Published on

அணைக்கட்டு,

ஒடுகத்தூர் பேரூராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் ஆய்வு செய்தார். அவருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருமால் மற்றும் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

முதலில் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று கணக்கு வழக்குகளை பார்வையிட்டார். அதன்பிறகு பேரூராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். கடந்த 3 ஆண்டுகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 432 வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தது. 432 வீடுகளும் கட்டப்பட்டுள்ளதா? அந்த பணிகள் முழுமை பெற்றுள்ளதா? என்பதை பேரூராட்சி செயல் அலுவலர் கோபியிடம் கேட்டார். அப்போது 97 வீடுகள் கட்டும் பணி முடியவில்லை. அது குறித்து கேள்வி எழுப்பிய கலெக்டர் உடனடியாக மீதமுள்ள வீடுகளையும் கட்டி முடிக்க செயல் அலுவலர் கோபிக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து ரூ.1 கோடி நிதியில் நடைபெற்றுவரும் சாலைப்பணி மற்றும் வெங்கனபாளையத்திற்கு செல்ல உயர்மட்ட மேம்பால பணிகளையும் திடக்கழிவு மேலாண்மை கட்டிடத்தை பார்வையிட்டார். அதில் குப்பைகள் மலைபோல் உள்ளதை பார்த்த கலெக்டர், செயல் அலுவலர் கோபியிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்காமல் இப்படி உள்ளதே நாளை முதல் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து எடுக்கும்போது அதை படமாக எனக்கு அனுப்ப வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com