கயத்தாறு அருகே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு

கயத்தாறு அருகே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.
கயத்தாறு அருகே கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு
Published on

கயத்தாறு,

மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஆத்திகுளத்துக்கு வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதேபோன்று மராட்டிய மாநிலத்தில் இருந்து கயத்தாறு அருகே கொத்தாளிக்கு வந்த 2 பேருக்கும், ராமலிங்கபுரம், புதுக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து அந்த கிராமங்கள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்கு சுகாதார துறையினர் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். மேலும் அங்கு வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று கயத்தாறு அருகே ஆத்திகுளம் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆய்வு நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்களை மாவட்ட எல்லைகளில் கண்டறிந்து, கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வருகிறவர்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்காமல் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடாது. அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே சொந்த ஊர்களுக்குள் அனுமதிக்க வேண்டும். இதுதொடர்பாக அந்தந்த ஊர் மக்கள், தன்னார்வலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், சசிகுமார், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜோதிபாசு, பஞ்சாயத்து தலைவி செல்வி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com