காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை: அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கொலை: அண்ணன்-தம்பி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் பொரணி அருகேயுள்ள குப்பாகவுண்டனூரை சேர்ந்த முத்துசாமி மகன் கார்த்தி (வயது 19). இவர் கடந்த 2017-ம் ஆண்டு, தாந்தோன்றிமலை அரசு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். கபடி வீரரான இவர், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வந்தபோது, ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலித்து வந்தனர்.

இந்தநிலையில் கார்த்தியின் நண்பரான, அதே கல்லூரியில் பி.எஸ்சி மண்ணியல் 3-ம் ஆண்டு படித்த, ஜெகதாபி அருகே கிருஷ்ணாகவுண்டனூரை சேர்ந்த தர்மராஜ் (20) என்பவரும் அதே பெண்ணை காதலித்தார். இதனால் அந்த பெண் திடீரென கார்த்தியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த கார்த்தி, தான் காதலிக்கும் பெண்ணுடன் நீ ஏன் பழகுகிறாய்? என கூறி தர்மராஜை திட்டினார்.

இதனால் தன் காதலுக்கு கார்த்தி தான் முதல் எதிரி என நினைத்த தர்மராஜ் அவரை தீர்த்து கட்ட எண்ணினார். இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந்தேதி அன்று கபடி போட்டிக்கு சென்றுவிட்டு வந்த கார்த்தியை, மது அருந்துவதற்காக தர்மராஜ், அவரது அண்ணன் ராமராஜ் (22), துளசிகொடும்பை சேர்ந்த அருண்குமார் (20) ஆகியோர் அழைத்தனர். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து அல்லாலிகவுண்டனூர் சுடுகாட்டு பகுதியில் மது அருந்தினர்.

அப்போது தர்மராஜூக்கும், கார்த்திக்கிற்கும் அந்த பெண்ணின் காதல் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தர்மராஜ் உள்பட 3 பேர் சேர்ந்து, பீர் பாட்டிலால் கார்த்தியை மண்டையில் அடித்ததோடு, கழுத்தை நெரித்து கொன்றனர்.

பின்னர் போலீசில் மாட்டி கொள்வோமோ? என்கிற அச்சத்தில் கார்த்தியின் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று தனியார் சிமெண்டு ஆலைக்கு செல்லக்கூடிய ரெயில்வே தண்டவாள பகுதியில் வீசிவிட்டு, ரெயில்மோதி இறந்தது போல் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் வெள்ளியணை போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கொலை செய்தல், கொலைக்கு சதி திட்டம் தீட்டுதல், கொலைக்கான தடயத்தை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ், ராமராஜ், அருண்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்ததால் நேற்று, நீதிபதி எஸ்.சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளிகள் தர்மராஜ், ராமராஜ், அருண்குமார் ஆகியோருக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் அதனை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இதேபோல் கொலைக்கு சதி திட்டம் தீட்டியதற்காக அந்த 3 பேருக்கும் மற்றொரு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதனை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

கொலைக்கான தடயத்தை மறைத்த குற்றத்துக்காக அவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அதனை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால் அந்த 3 பேரும், அதிகபட்ச தண்டனையான ஒரு ஆயுள் தண்டனையை அனுபவிப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தர்மராஜ் உள்பட 3 பேரையும், போலீசார் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com