மக்களின் வாழ்க்கை சகஜநிலைக்கு திரும்புகிறது: பெங்களூருவில் விரைவில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களின் வாழ்க்கை சகஜநிலைக்கு திரும்புகிறது என்றும், பெங்களூரு மாநகரில் விரைவில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை சகஜநிலைக்கு திரும்புகிறது: பெங்களூருவில் விரைவில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையம் அருகே அனந்தராவ் சர்க்கிள் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் சங்கொள்ளி ராயண்ணாவின் பெயர் சூட்டப்படும் என்று மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, அந்த மேம்பாலத்திற்கு அவரது பெயர் சூட்டும் விழா நேற்று காலையில் நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு, மேம்பாலத்திற்கு சங்கொள்ளி ராயண்ணாவின் பெயரை சூட்டினார்.

பின்னர் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அனந்தராவ் சர்க்கிள் பகுதியில் உள்ள இந்த மேம்பாலத்திற்கு சுதந்திர போராட்ட வீரரான சங்கொள்ளி ராயண்ணாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பதே மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். சுதந்திரத்திற்காக போராடிய மகான் சங்கொள்ளி ராயண்ணா ஆவார். அவரது பெயரை இந்த மேம்பாலத்திற்கு சூட்டும் பாக்கியம் கிடைத்திருப்பதை பெரிய புண்ணியமாக கருதுகிறேன். பெலகாவி மாவட்டம் பீமரனஹள்ளியில் சங்கொள்ளி ராயண்ணா சிலை அமைக்கப்படுவது உறுதி.

இதற்காக மக்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். இதுதொடர்பாக பெலகாவி மாவட்ட பொறுப்பு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, மடாதிபதியை தொடர்பு கொண்டு பேசினேன். பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாணும்படி மந்திரி ரமேஷ் ஜார்கிகோளிக்கு தெரிவித்துள்ளேன். அங்குள்ள அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி ஆலோசிக்க உள்ளார். அந்த ஆலோசனையில் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும்.

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மெட்ரோ ரெயில் இயக்கப்படாமல் உள்ளது. கொரோனா காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக சகஜநிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. பெங்களூருவில் மெட்ரோ ரெயிலை இயக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மக்களின் வாழ்க்கை சகஜநிலைக்கு திரும்பி வருவதால் கூடிய விரைவில் பெங்களூருவில் மெட்ரோ ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காரணமாக முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு மெட்ரோ ரெயில் இயக்கப்படும். பெங்களூரு நகரின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெங்களூரு நகரம் முக்கிய பங்காற்றுகிறது.

பெங்களூரு நகரில் அடிப்படை வசதிகளை மேலும் அதிகப்படுத்த அரசு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் மாநிலம் சகஜநிலைக்கு திரும்பி பொருளாதாரம் வளர்ச்சி அடையும். கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் மாநிலத்தின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மந்திரி பைரதி பசவராஜ், தினேஷ் குண்டுராவ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் கவுதம்குமார், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com