கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் கோவில்கள் உள்பட வழிபாட்டு தலங்கள் திறப்பு - முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் கர்நாடகத்தில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ்துவ தேவாலயங்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கோவில் திருவிழாக்களும் மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 60 நாட்களுக்கு பிறகு கோவில் உள்பட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று அறிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

மத்திய அரசின் அனுமதி தேவை

கர்நாடகத்தில் கோவில்கள், வழிபாட்டு தலங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை வருகிற 1-ந் தேதியில் இருந்து திறக்க ஆலோசித்துள்ளோம். பிரதமரின் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவில்கள் திறக்கப்பட்டால், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களும் திறக்கப்பட வேண்டும். அதற்கு எவ்வித தடையும் இருக்கக்கூடாது. நமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் ஒன்றே. ஆனால் இவை அனைத்திற்கும் மத்திய அரசின் அனுமதி தேவை. எல்லையை மீறி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரண உதவியை அறிவித்துள்ளேன்.

கொரோனா பரிசோதனை

கொரோனா வைரசுடன் வாழ மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்கும் பணிகளும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைளும் ஒருசேர நடைபெற வேண்டும். கொரோனா பரிசோதனைக்காக சளியை சேகரிக்கும் மையங்கள் நகரில் 15 இடங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

நாட்டிலேயே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெங்களூரு முன்மாதிரி நகரம் என்று மத்திய அரசே அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com