கொரோனாவின்போது மக்களை சந்திக்காமல் தேர்தலுக்காக வருகிறார்கள்: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பின்போது வராதவர்கள் தேர்தலுக்காக இப்போது மக்களை சந்திக்க வருகிறார்கள் என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
கொரோனாவின்போது மக்களை சந்திக்காமல் தேர்தலுக்காக வருகிறார்கள்: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

செவிசாய்க்கவில்லை

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றி பிரதமர் கவலைப்படவில்லை. விவசாயிகள் வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களது போராட்டங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயருகிறது. காங்கிரஸ் ஆட்சி மத்தியில் இருந்தபோது 6 மாதத்துக்கு ஒருமுறை விலையை ரூ.1 அல்லது 2 ஏற்றினாலே பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

முட்டுக்கட்டை

மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற போராடி வருகிறோம். திட்டங்களை தடுக்கும் கவர்னர் கிரண்பெடிக்கு மத்திய அரசு ஆதரவாக உள்ளது. அதைக்கண்டித்தும் போராட்டங்களை நடத்தினோம். கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து திட்டங்களை காலதாமதப்படுத்த முட்டுக்கட்டை போட்டு வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தை பறித்து தமிழகத்தோடு இணைக்கவும் முயற்சி நடக்கிறது. சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றவும் திட்டமிடுகிறார்கள். புதுவை நகராட்சி கட்டிடம் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்டது.

ஆனால் அதை திறக்க கவர்னர் கிரண்பெடி தடை விதிக்கிறார். அதற்கு மத்திய அரசு பிரதிநிதிகள் வரவேண்டுமாம்.

தேர்தலுக்காக வருகிறார்கள்

கொரோனா பரவிய காலகட்டத்தில் நாங்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தோம். ஆஸ்பத்திரிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை எடுத்து வந்தோம். ஆனால் சிலர் கொரோனாவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார்கள். அவர்கள் மக்களையும் சந்திக்க தயங்கினார்கள். ஆனால் இப்போது தேர்தல் வர உள்ளது என்பதால் வெளியே வருகிறார்கள்.

எதிர்க்கட்சிகள் எங்களை எதிரிக்கட்சியாக பார்க்கிறது. எதற்கெடுத்தாலும் குறை கூறுகிறார்கள். நிவர் புயலின்போது புதுவையில் 30 செ.மீ. மழை பெய்தது. அப்போது தேங்கிய தண்ணீரை 8 மணிநேரத்தில் வடிய வைத்தோம்.

கடன் தள்ளுபடி

நமது மாநில கடனை தள்ளுபடி செய்ய நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். புதுவை அரசு தனிக்கணக்கு தொடங்குவதற்கு முன்பு இருந்த கடனை தள்ளுபடி செய்ய நான் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். மத்திய மந்திரியாக இருந்தபோதும் பேசியுள்ளேன். மாநில அந்தஸ்து என்ற கோஷத்தை முன்னிறுத்தி ஆட்சியைபிடித்த ரங்கசாமி பாரதீய ஜனதா கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தார். இப்போதும் கூட்டணி பேசிவருகிறார். அவர் கடனை தள்ளுபடி செய்யவும், மாநில அந்தஸ்து பெறவும் அப்போது நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆனால் தேர்தல்

வரப்போகிறது என்றவுடன் மாநில அந்தஸ்து, தேர்தல் புறக்கணிப்பு என்றெல்லாம் பேசுகிறார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பிரசார பாடல்

தொடர்ந்து அவர் புதுவையின் தனித்தன்மை எங்களின் உரிமை என்ற பிரசார பாடலை வெளியிட்டார். அப்போது மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், அமைச்சர் ஷாஜகான், வைத்திலிங்கம் எம்.பி., நிர்வாகிகள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com