திருச்சியில் அஞ்சல் வார விழா தொடக்கம்

திருச்சியில் அஞ்சல் வார விழா தொடங்கியது.
திருச்சியில் அஞ்சல் வார விழா தொடக்கம்
Published on

திருச்சி,

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 9-ந்தேதி உலக அஞ்சல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி இந்தியாவில் அஞ்சல் வார விழா ஒரு வார காலம் கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் நேற்று நடந்த அஞ்சல் வார விழாவை மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் நான் ஆராய்ச்சி மாணவனாக இருந்த போது அஞ்சல் துறை எனக்கு பேருதவியாக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து புத்தகங்களை தபால் மூலம் பெற்று படித்தேன். இன்று என்னிடம் 32 பேர் ஆராய்ச்சி மாணவர்களாக படித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் வழிகாட்டி வருகிறேன் என்றால் எனது வெற்றிக்கு இந்திய அஞ்சல் துறை தான் காரணம் என்றார்.

படகு மூலமும் சேவை

மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் சுமதி ரவிச்சந்திரன் பேசுகையில் அஞ்சல் துறை வெறும் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும் துறையாக மட்டும் இன்றி கால மாற்றத்திற்கு ஏற்ப தகவல் தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி கண்டு உள்ளது. மழை, வெயில் என எந்த இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் தபால் துறையினர் தங்களது கடமையை செய்து வருகிறார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் படகு மூலம் தபால் சேவை நடந்து வருகிறது. மலைப்பிரதேசங்களில் நடந்து சென்றும் தபால்கள் வினியோகம் செய்யப்படுகிறது என்றார்.

அஞ்சல் உறை வெளியீடு

இந்த விழாவில் அஞ்சல் அட்டை சேவை தொடங்கி 140 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி சிறப்பு அஞ்சல் உறையை சுமதி ரவிச்சந்திரன் வெளியிட அதனை தொழில் அதிபர் மதன் பெற்றுக்கொண்டார்.

மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ், உதவி இயக்குனர் சாந்தலிங்கம், அதிகாரிகள் கணபதி, சுவாமிநாதன், தபால் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அஞ்சல் துறை உதவி இயக்குனர் மைக்கேல் ராஜ் நன்றி கூறினார்.

மாணவிகள் ஊர்வலம்

முன்னதாக சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தபால் சேவை பற்றிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு தபால் சேவை எப்படி நடக்கிறது என்பது பற்றி அதிகாரிகள் விளக்கி கூறினார்கள். மேலும் 140-வது அஞ்சல் அட்டை தின விழாவை நினைவு கூறும் வகையில் பள்ளி மாணவிகள் தபால் அட்டைகளை அஞ்சல் பெட்டியில் போட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com