குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் தர்ணா

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் வளாகத்தில் அழுகிய நெற்பயிர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் தர்ணா
Published on

கரூர்,

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

விவசாயிகள் தர்ணா

குளித்தலை உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில், மருதூர் கிராமம் வடக்கு 2 மற்றும் தெற்கு 1, குமாரமங்கலம் கிராம பகுதி விவசாயிகள் மற்றும் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அழுகிய நெற்பயிர்களுடன் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் திடீரென வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சேதமடைந்த பயிர்களுக்கு முழு காப்பீட்டுத்தொகை மற்றும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனப்பகுதிகளை டெல்டா பகுதியாக அறிவிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

டெல்டாவாக அறிவிக்க வேண்டும்

அந்த மனுவில், மழையால் நெற்பயிர்கள் அனைத்தும் முளைத்தும், அழுகியும் சேதமடைந்து விட்டதால், நஷ்டஈடு வழங்க வேண்டும். மாயனூர் முதல் தாயனூர் வரையில் உள்ள கட்டளைமேட்டு வாய்க்கால் பாசனப்பகுதிகளை டெல்டாபகுதியாக அறிவிக்க வேண்டும். ஒரு ஏக்கர் அறுவடை செய்ய ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் மழையை இயற்கை பேரிடராக அறிவித்து ஏக்கருக்கு முழு காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com