வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: 4 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை - ஊழல் தடுப்புபடை நடவடிக்கை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து 4 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்புபடையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: 4 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை - ஊழல் தடுப்புபடை நடவடிக்கை
Published on

பெங்களூரு,

பெங்களூரு அலி அஸ்கர் ரோட்டில் கூட்டுறவு துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் மேற்பார்வையாளராக இருப்பவர் சதீஷ். இதேபோல், விஜயாப்புராவில் கர்நாடக கிராம உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனத்தில் துணை இயக்குனராக இருப்பவர் சரத்.

மேலும், கதக் மாவட்டத்தில் விவசாயத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் பிரகாஷ் கவுடா. பெங்களூரு மாநகராட்சியில் ஜே.பி.நகர் துணை மண்டலத்தில் உதவி வருவாய் அதிகாரியாக செயல்பட்டு வருபவர் மஞ்சுநாத்.

இவர்கள் 4 பேரும் தங்களின் வருமானத்தை விட அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்புபடைக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில், ஊழல் தடுப்புபடை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிகாரி சதீஷ் உள்பட 4 பேரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அதிகாரிகளின் உறவினர்களின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை பெங்களூரு, விஜயாப்புரா, கதக் உள்பட பல்வேறு இடங்களில் நடந்தது.

சோதனையின்போது ஊழல் தடுப்புபடையினர், அதிகாரி சதீஷ் உள்பட 4 பேரின் வீடுகளில் இருந்த வங்கி புத்தகங்கள், சொத்து பத்திரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி பரிசீலனை செய்தனர்.

தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் மதிப்புகள் மதிப்பிடப்பட்டன. அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஊழல் தடுப்புபடை அதிகாரிகள் சில விவரங்களை கேட்டறிந்தனர். நேற்றைய சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இந்த சோதனையை அந்த பகுதி போலீசாரின் உதவியுடன் ஊழல் தடுப்புபடை அதிகாரிகள் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com