முழு சுற்றுப்புறத்தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவு

ராமநாதபுரத்தில் வைரஸ் காய்ச்சலை தடுக்க ஊராட்சி செயலர்கள் முழு சுற்றுப்புறத்தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.
முழு சுற்றுப்புறத்தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் கிராம ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பணிகளில் கிராம ஊராட்சி செயலர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. ஊரக பகுதிகளில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் குடிநீரில் அனுமதிக்கப்பட்ட அளவு குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை போதிய கால இடைவெளியில் முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும் குடிநீர் வினியோக குழாய்களில் ஏற்படும் உடைப்பு, நீர்கசிவு போன்றவற்றை கண்டறிந்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து உடனடியாக அதனை சீர் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளையில் முறைகேடான இணைப்புகள் மூலம் தண்ணீரை பயன்படுத்துவோர் குறித்து ஆய்வு செய்து எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கொசுப்புழு உற்பத்தி தடுப்பு களப்பணியாளர்களோடு ஒருங்கிணைந்து ஒவ்வொரு வீடாக சென்று லார்வா மற்றும் கொசு முட்டைகள் அழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூய்மைக்காவலர்களை முறையாக பயன்படுத்தி வீடுகள்தோறும் குப்பைகளை பெற்று அதனை தரம் பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

குப்பை கொட்டுவதற்கென அனுமதிக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர கண்ட இடங்களில் குப்பையை கொட்டுபவர்கள் மீது பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்த வேண்டும். வைரஸ் காய்ச்சலை தடுக்க ஊராட்சி செயலர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை ஒருங்கிணைத்து இன்னும் 7 தினங்களுக்குள் முழு சுற்றுப்புறத்தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தங்களது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏதும் கண்டறியப்பட்டால் உடனடியாக பொது சுகாதாரத்துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை உள்பட அரசு அலுவலர்கள், அனைத்து கிராம ஊராட்சிகளின் செயலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com