புதுவை அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்

புதுவை அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்
Published on

புதுச்சேரி,

புதுவையில் ரேஷன்கார்டுகளுக்கு 5 மாத அரிசி வழங்கப்படவில்லை. இதற்காக ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். குப்பை வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க. சார்பில் 30 தொகுதிகளிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

லாஸ்பேட்டை தொகுதி சார்பில் உழவர்சந்தை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தெருவிளக்குகள் எதுவும் சரியாக எரிவது இல்லை. நிதிஇல்லை என்று காரணம் காட்டி வருகின்றனர். ஆனால் அமைச்சர்கள் தாறுமாறாக செலவு செய்து வருகின்றனர். நிர்வாக சீர்கேட்டால் அரசு முற்றிலும் செயலிழந்து விட்டது.

ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வே தற்போது அரசுக்கு எதிராக புகார் கூறியுள்ளார். மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியாத இந்த அரசு ஒவ்வொரு முறையும் கவர்னர், மத்திய அரசை தான் காரணம் காட்டுகிறது. மாநில அரசு முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை. இந்த அரசு ஏழை எளிய மக்களின் விரோத அரசாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் கையிருப்பு இ்ல்லை. முதல்-அமைச்சர் நாராயணசாமி ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார். புதுவையில் தற்போது பால் தட்டுப்பாடு உள்ளது. அதனை போக்க அரசு நடவடிக்கை எடுக்காமல் மதுபானம் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சி வெற்றி பெற்றால் புதுவையில் உள்ள குப்பை வரி முற்றிலும் ரத்து செய்யப்படும். முன்பு தமிழக மக்கள் புதுவைக்கு வர விரும்புவார்கள். இன்று புதுவை மாநிலத்தை விட்டு மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்பும் நிலையை காங்கிரஸ் அரசு உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் செல்வ கணபதி எம்.எல்.ஏ., தொகுதி தலைவர் சோமசுந்தரம், தொகுதி நிர்வாகிகள் ஜெயந்தி, ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊசுடு தொகுதி குரும்பாபேட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சாய். சரவண குமார் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மங்கலம் தொகுதி கோட்டைமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் குமார், பொதுச்செயலாளர் வேதகிரி மற்றும் தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

வில்லியனூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் மோகன் குமார் கலந்து கொண்டு கண்டனஉரையாற்றினார். இதில் தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அரியாங்குப்பம் தொகுதி பிரம்மன் சதுக்கம் எதிரே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். தொகுதி நிர்வாகிகள் ராமு, பிச்சைமுத்து, பாஸ்கல் ராஜ், சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மணவெளி தொகுதி சார்பில் தவளக்குப்பம்- பூரணாங்குப்பம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஏம்பலம் செல்வம், சக்திபாலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருபுவனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திருபுவனை தொகுதி தலைவர் கராத்தே முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில செயலாளர் நாகராஜ் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com