சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப்பெற வலியுறுத்தி சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
Published on

கரூர்,

தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 27-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் ஜவகர்பஜாரில் உள்ள தபால் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் தேவைக்கேற்ப நிதியை அறிவித்து உள்ளாட்சி பணியை தொய்வின்றி மேற்கொண்டது தி.மு.க. அரசு. ஆனால் தற்போது உள்ளாட்சி பகுதிகளுக்கு உரிய திட்டங்கள், பணிகள் முடங்கி கிடப்பது மக்களுக்கே தெரியும். இந்த நிலையில் சொத்து வரியை 100 சதவீதம் உயர்த்தி இருப்பது மக்களுக்கு பேரிடியாக தான் இருக்கிறது. இது அவர்களது வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் உள்ளது. எனவே சொத்துவரி உயர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். கரூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தை அமைப்பதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி மணி, மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தாந்தோன்றி ஒன்றிய செயலாளர் எம்.ரகுநாதன், மாநில சட்ட பிரிவு இணை செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர்கள் எஸ்.வி.கனகராஜ், கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குளித்தலையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை எம்.எல்.ஏ. ராமர் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்துவரி உயர்வினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், உமாபதி, மருதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத், மாவட்ட பிரதிநிதிகள் ஜாபருல்லா, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com