

பூந்தமல்லி,
பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிப்பதற்காக நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் உரக்கிடங்குகளை நகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. இதே போல பூந்தமல்லி பஸ் நிலையத்திற்குள்ளும் உரக்கிடங்கு ஒன்றை அமைத்து வருகிறது.
இதற்கு பயணிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தற்போது பூந்தமல்லி ஒருங்கிணைந்த வக்கீல்கள் சங்கத்தை சேர்ந்த வக்கீல்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பஸ் நிலையத்தில் உரக்கிடங்கு அமைக்க கூடாது என நகராட்சி ஆணையர் சித்ராவை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
சாலை மறியல்
ஆனால் நகராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உரக்கிடங்கை அமைத்து வருகிறது. இதனை கண்டித்து நேற்று பூந்தமல்லி ஒருங்கிணைந்த கோர்ட்டுகள் சங்கத்தின் சார்பில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஒன்று திரண்டு ஊர்வலமாக சென்று உரம், கிடங்கு அமைக்கும் பணியில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி விட்டு அதற்கு பூட்டுப்போட்டு பூட்டினர். பின்னர் ஊர்வலமாக வந்த வக்கீல்கள் பூந்தமல்லி பஸ் நிலையம் அருகே டிரங்க் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தொற்றுநோய் பரவும் அபாயம்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள் கூறுகையில்:-
பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளும் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தையொட்டி ஒருங்கிணைந்த கோர்ட்டுகளும், நீதிபதிகளின் குடியிருப்பும் உள்ளன. மேலும் இதன் அருகிலேயே பள்ளி, கடைகள் அமைந்துள்ளன. பஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே நகராட்சி நிர்வாகம் உரக்கிடங்கை அமைத்து வருகிறது. இதன் அருகிலேயே தாய்மார்கள் பாலூட்டும் அறையும் உள்ளது. இங்கு உரக்கிடங்கு அமைக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், கடும் சுகாதார சீர்கேடும், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தும் உரக்கிடங்கு அமைப்பதை நிறுத்தவில்லை.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் நகராட்சி நிர்வாகம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பஸ் நிலையத்தில் உரக்கிடங்கு அமைத்து பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. தற்போது ஒரு தொட்டியில் மட்டும் குப்பைகள் கொட்டி உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே நண்பர்கள் நகர் பூங்காவிற்குள் உரக்கிடங்கு அமைக்க அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதனையும் நிறுத்தவில்லை.
உடனடியாக பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் உரக்கிடங்கு பணியை நிறுத்தி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.