

விருதுநகர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், மீத்தேன் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டத்தை கைவிடவேண்டும், ஆற்று மணல், தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இயற்கை வளங்களை அழித்து தமிழகத்தை பாலைவனமாக்கிட மத்திய-மாநில அரசுகள் முயற்சிப்பதாக கூறி அதனை கண்டித்தும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த அமைப்பின் மாவட்டசெயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 72 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.