

தாம்பரம்,
சென்னை தலைமைச்செயலகத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து, பல்லாவரம் தொகுதி தி.மு.க. சார்பில் ஜோசப் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பியபடி குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் ஊர்வலமாக நடந்து வந்தனர்.பின்னர் குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வேகேட் எதிரே ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குரோம்பேட்டை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம் தொகுதி தி.மு.க. சார்பில் தாம்பரம் பஸ் நிலையம் அருகில் ஜி.எஸ்.டி. சாலையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை தாம்பரம் போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல சிட்லபாக்கம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளிலும் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து ஆவடியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சா.மு. நாசர் தலைமையில் ஆவடி புதிய ராணுவ சாலையில் ஏராளமான தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ஆவடி போலீசார் கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.