மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 8 இடங்களில் சாலை மறியல் - 351 பேர் கைது

மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தேனி மாவட்டத்தில் 8 இடங்களில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய-மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 8 இடங்களில் சாலை மறியல் - 351 பேர் கைது
Published on

தேனி,

கொரோனா நோய் பரவல் நெருக்கடியை பயன்படுத்தி மத்திய அரசு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றி உள்ளதாகவும், அதற்கு தமிழக அரசு துணை போனதாகவும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, மயிலாடும்பாறை, உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர், போடி ஆகிய 8 இடங்களில் சாலை மறியல் நடந்தது. தேனியில் நேரு சிலை சிக்னல் அருகில் சாலை மறியல் செய்வதற்காக கட்சியினர் பள்ளிவாசல் தெருவில் இருந்து ஊர்வலமாக வந்தனர். சிக்னல் பகுதியில் திரண்டு நின்று அவர் கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் பெருமாள் உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னமனூரில் ஒன்றிய செயலாளர் கதிரப்பன் தலைமையில் ஒன்றிய துணை செயலாளர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் தமிழ் பெருமாள், காசிராஜா உள்பட ஏராளமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடும்பாறையில், கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் திருமலைக்கொழுந்து, சென்ராம் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், வருசநாடு அருகே கிடப்பில் போடப்பட்ட முருக்கோடை-காமராஜபுரம் தார்சாலை பணிகளை மீண்டும் தொடங்க கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

கம்பத்தில் நகர தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் போக்குவரத்து சிக்னல் முன்பு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆண்டிப்பட்டியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில், ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் மாவட்டத்தில் 8 இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட மொத்தம் 351 பேரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com