

கும்மிடிப்பூண்டி,
மத்திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் நேற்று மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் பேரணி மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.
ஏ.ஐ.சி.சி.டியூ.வின் மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்திற்கு, நிர்வாகிகள் துளசி நாராயணன், கோபால், அர்ச்சுணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக கும்மிடிப்பூண்டி பயணியர் மாளிகையில் இருந்து பேரணியாக வந்த தொழிற்சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள தபால் நிலையம் முன்பு ஜி.என்.டி. சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்பட 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதே போல மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனை தனியாருக்கு விற்க அனுமதிப்பதை கண்டித்து நேற்று பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் ஆலையின் முன்பு தொழிற்சங்க அமைப்பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மோசஸ் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் பத்ருடூ, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.