மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்து தபால் நிலையங்கள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்து தபால் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்து தபால் நிலையங்கள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Published on

ஊட்டி,

நாடு முழுவதும் அனைத்து மாநில மின்வாரியங்களும் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதற்கு மாநில அரசுகளின் நிலைப்பாடுகளை கேட்டறிந்து வருகிறது. மின்வாரியத்தை தனியார்மயமாக்கினால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்வினியோகம் பாதிக்கப்படும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கிடையே நேற்று நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்து மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தபால் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊட்டி சேரிங்கிராசில் உள்ள தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் மின்வாரியத்தை தனியார்மயமாக்கக்கூடாது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். கிராமப்புற விவசாயிகள், நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். சமூக இடைவெளி விட்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேள்விக்குறி

இதுகுறித்து ஆர்.கணேஷ் எம்.எல்.ஏ. கூறும்போது, மத்திய நிதி அமைச்சர் முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களிலும், தொடர்ந்து பிற மாநிலங்களிலும் உள்ள மின்வாரியங்கள் தனியார்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி மத்திய அரசு மாநில மின்வாரியங்களை பிரிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் இடையே பணி பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

ஊட்டி நகரில் மார்க்கெட் தபால் நிலையம், தலைமை தபால் அலுவலகம், பிங்கர்போஸ்ட் தபால் நிலையம், பெர்ன்ஹில் தபால் நிலையம் மற்றும் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்பட மாவட்டம் முழுவதும் தலைமை தபால் அலுவலகங்கள், கிளை தபால் நிலையங்கள், பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், மின்உற்பத்தி நிலைய அலுவலகம் என மொத்தம் 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com