

புதுச்சேரி,
புதுவை குமரகுருபள்ளத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவர் புஸ்சி வீதி மற்றும் முத்தியால்பேட்டையில் வட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் குலுக்கல் சீட்டு, சேமிப்பு திட்டம் என நடத்தி வந்துள்ளார். இவரிடம் முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் என பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சீட்டு கட்டி வந்தனர். தொடக்கத்தில் சஞ்சய்குமார், சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை சரியாக கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக அவரிடம் சீட்டுக்கட்டியவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களையும் அதில் சேர்த்துவிட்டனர். அவ்வாறு வாடிக்கையாளர்களை சேர்த்து விடுபவர்களுக்கு ஊக்கத்தொகை, பணமுதலீட்டுக்கு ஓராண்டில் இருமடங்கு பணம் என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற்று அதை பங்குச்சந்தையிலும், தங்கத்திலும் முதலீடு செய்வதாக சஞ்சய்குமார் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பணம் கட்டியவர்களுக்கு முதிர்வு தேதி வந்தும் லட்சக்கணக்கில் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பாக அவர்கள் சஞ்சய்குமாரின் உறவினர்களிடமும் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்களும் பணத்தை கொடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஏமாற்றமடைந்தவர்கள் டி.ஜி.பி. அலுவலகம், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். ஆனாலும் போலீசார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. இதைத்தொடர்ந்து சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் தங்களிடம் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த சஞ்சய்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று முத்தியால்பேட்டையில் உள்ள அவரது வட்டிக்கடை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.