ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது

சென்னையில் போலீசாரின் குடும்பத்தினர் உள்பட ஏராளமான பேர்களிடம் பணம் வசூலித்து ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்ட அரிசி கடை அதிபர், மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் மோசடி சென்னையில் மனைவியுடன் அரிசி கடை அதிபர் கைது
Published on

சென்னை,

சென்னை புதுப்பேட்டை டிரைவர் தெருவில் அமுதம் அரிசி கடை என்ற பெயரில் அரிசி கடை நடத்தி வந்தவர் கண்ணன் (வயது 45). அரிசி கடை கண்ணன் என்ற பெயரில் அந்த பகுதியில் பிரபலமாக பேசப்பட்டவர். இவரது மனைவி பெயர் கவுரி (36).

விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் இவரது வீடு உள்ளது. அங்கு இவரது குடும்பத்தினர் வசிக்கிறார்கள். கண்ணன் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அந்த ஏலச்சீட்டில் புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏராளமான போலீஸ் குடும்பத்தினர் பணம் கட்டி வந்தனர்.

தான் வசிக்கும் விருகம்பாக்கம் பகுதியிலும் ஏராளமான பேர்களை ஏலச்சீட்டில் சேர்த்து கண்ணன் பணம் வசூலில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் இவர் தன்னிடம் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு முதிர்ச்சி அடைந்த தொகையை முறையாக திருப்பி கொடுத்து வந்தார்.

இதனால் இவர்மீது நம்பிக்கை ஏற்பட்டு ஏராளமான பேர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டினார்கள். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கொடுத்து வந்தனர்.

ஆனால் கடந்த 1 ஆண்டாக இவர் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு முதிர்ச்சி அடைந்த தொகையை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். ஏலச்சீட்டில் வசூலான கோடிக்கணக்கான பணத்தில் சொந்தமாக வீடு கட்டியதோடு தனக்கு வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் தனது அரிசி கடையையும் பூட்டிவிட்டு குடும்பத்தோடு கண்ணன் தலைமறைவாகிவிட்டார்.

இவரிடம் பணம் கட்டி ஏமாந்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த அருண்குமார் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். அரிசி கடை கண்ணன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, ஏலச்சீட்டு மூலம் அவர் வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை திரும்ப கிடைப்பதற்கு உரிய ஏற்பாடு செய்து தரும்படி புகார் மனுவில் கூறியிருந்தனர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் மேரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அரிசி கடை கண்ணன், அவரது மனைவி கவுரி, மாமனார் நாகராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டது. இவர்களில் நாகராஜ் (59) சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

தலைமறைவாக இருந்த கண்ணனையும், அவரது மனைவி கவுரியையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com