

நாகமலைபுதுக்கோட்டை,
மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை கைது செய்யும் போலீசார் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை பறிமுதல் செய்து வருகின்றனர். விதி மீறுபவர்கள் மீதான நடவடிக்கை தொடர்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை நாகமலைபுதுக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் போலீஸ் நிலைய வளாகம் இரு சக்கர வாகன காப்பகம் போன்று காட்சியளிக்கிறது. வரும் நாட்களில் தொடர்ந்து விதிமீறல் வாகனங்களை பறிமுதல் செய்யும் பட்சத்தில் அவற்றை நிறுத்தி, பாதுகாக்க வழியில்லாமல் போலீசார் திணறி வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பல போலீஸ் நிலையங்களின் நிலை இதுதான். எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தி, பாதுகாக்க மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை இணைந்து மாற்று இடவசதியை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.