நாட்டுக்கோழி முட்டைகள் எனக்கூறி சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்ட முட்டைகள் பறிமுதல்

கோவையில் நாட்டுக்கோழி முட்டைகள் எனக்கூறி சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்ட முட்டைகளை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாட்டுக்கோழி முட்டைகள் எனக்கூறி சாயம் ஏற்றி விற்பனை செய்யப்பட்ட முட்டைகள் பறிமுதல்
Published on

கோவை,

கோவை மாநகரில் சாயம் ஏற்றிய பண்ணை கோழி முட்டைகள், நாட்டுக்கோழி முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதை கண்டுபிடிக்க மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட 6 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் உக்கடம் மீன் மார்க்கெட், வடவள்ளி உழவர் சந்தை, எம்.ஜி.ஆர். ரோடு, லாரி பேட்டை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.

பறிமுதல்

இந்த சோதனையில் நடிகர் தனுஷ் நடித்த கொடி சினிமா படத்தில் வருவது போல் பண்ணை கோழி முட்டைகளை சாயம் ஏற்றி நாட்டுக்கோழி முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முட்டைகளை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10 வியாபாரிகளிடம் இருந்து சாயம் ஏற்றிய 3 ஆயிரத்து 900 பண்ணை கோழி முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

கண்டுபிடிப்பது எப்படி?

தேயிலைத்தூளை பயன்படுத்தி பண்ணை கோழி முட்டைகளுக்கு சாயம் ஏற்றப்படுகிறது. இந்த முட்டைகளை சிறிது நேரம் தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், அந்த சாயம் நீங்கி வெள்ளை நிற முட்டையாக காட்சியளிக்கும். இதுதவிர இந்த முட்டையின் ஓடுகளை நகத்தினால் சுரண்டும்போது சாயம் ஏற்றப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து கொள்ளலாம்.

சேலத்தில் இருந்து இதுபோன்ற முட்டைகளை வாங்கி வந்து ஒரு முட்டை ரூ.7 வரை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com