கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்: கல்வீசி தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைப்பு, அதிகாரிகளை சிறைபிடித்ததால் பரபரப்பு

தேவாரம் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க., அ.ம.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீசி தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைந்தது. தேர்தல் அதிகாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்: கல்வீசி தாக்கியதில் 2 பேரின் மண்டை உடைப்பு, அதிகாரிகளை சிறைபிடித்ததால் பரபரப்பு
Published on

தேவாரம்,

தேனி மாவட்டம் தேவாரத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்துக்கான தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., அ.ம.மு.க. சார்பில் தலா 11 பேரும், தி.மு.க. சார்பில் 10 பேரும், 2 பேர் சுயேட்சையாகவும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு 35 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றனர்.

இந்தநிலையில் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரிகளாக மனோகரன், வெள்ளைச்சாமி ஆகியோர் செயல்பட்டனர். நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. சங்க உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 600 பேர் வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அ.தி.மு.க.வினர் வாக்குச்சாவடிக்குள் வந்தனர். முறைகேடு நடந்திருப்பதாகவும், கூட்டுறவு தேர்தலை நடத்தக்கூடாது என்றும் அவர்கள் கூச்சல் போட்டனர். ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வினர், வாக்குசீட்டுகளை பறிக்க முயன்றனர்.

இதனை கண்ட அ.ம.மு.க., தி.மு.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் வாக்குபெட்டிக்குள் மையை ஊற்றினர். தொடர்ந்து அவர்கள் கல்வீசி தாக்கினர். இதில் அ.ம.மு.க.வை சேர்ந்த வீரணன் (வயது 59) என்பவரின் மண்டை உடைந்தது.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்கியதில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாரியப்பனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வாக்குப்பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. வாக்குசீட்டுகள் கிழித்து எறியப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே கூட்டுறவு சங்க தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அ.ம.மு.க., தி.மு.க.வினர் கூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்டு பூட்டினர். தேர்தலை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் தேர்தல் அதிகாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சங்க அலுவலகத்தை விட்டு வெளியே வரமுடியாமல் அதிகாரிகள் தவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து, தேர்தல் அதிகாரிகளை போலீசார் வெளியே அழைத்து வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com