பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்து சலவை தொழிலாளி சாவு

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறியதில் சலவை தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்து சலவை தொழிலாளி சாவு
Published on

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேசு வரிநகர் சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் முனிரத்னா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், தனது குடும்பத்துடன் வயாலிகாவல் 11-வது பி கிராஸ், 8-வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார். வீட்டையொட்டியே முனிரத்னா எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான அலுவலகமும் உள்ளது.

நேற்று காலை 9.15 மணியளவில் முனிரத்னா எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே பலத்த சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் வெடித்து சிதறியது. மேலும் அந்த மர்ம பொருள் வெடித்த பகுதியில் உள்ள சாலையில் சிறிய அளவில் பள்ளம் உண்டானது. அத்துடன் அங்கிருந்த வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

மேலும் மர்ம பொருள் வெடித்த பகுதியில் ஒருவர் தலை, கை, காலில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்தனர். அத்துடன் வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலியாகி விட்டதாகவும் அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. அதே நேரத்தில் முனிரத்னா எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது. அதாவது மர்ம பொருள் வெடித்த பகுதியில் இருந்து 50 அடி தூரத்தில் தான் முனிரத்னாவின் வீடு, அலுவலகம் இருக்கிறது.

இதுபற்றி அறிந்ததும் வயாலிகாவல் போலீசார், போலீஸ் கமிஷனர் சுனில்குமார், சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

வயாலிகாவல் 11-வது மெயின் ராட்டில் காலை 9.15 மணியளவில் மர்ம பொருள் வெடித்து சிதறி உள்ளது. அந்த பொருள் வெடித்ததில் ஒருவர் பலியாகி உள்ளார். அவர் வயாலிகாவலை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 55) ஆவார். அவர் சலவை தொழிலாளி என்றும் தெரியவந்துள்ளது. மர்ம பொருள் வெடித்தது பற்றி தடயவியல் நிபுணர்கள், தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பொருள் வெடிக்க காரணம் என்ன?. வெடி மருந்துகள் எதுவும் இருந்ததா? என்பது தெரியவில்லை. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்பு தான் அந்த பொருள் எது என்று தெரியவரும். காங்கிரஸ் எம்.எல்.ஏ. முனிரத்னாவின் வீட்டையோ, அலுவலகத்தை குறி வைத்தோ மர்ம பொருள் வெடிக்கச் செய்யப்படவில்லை. சாலைக்கு அடியில் வெடித்ததால் சிறிய பள்ளம் உண்டாகி இருக்கிறது. விசாரணைக்கு பின்பு அந்த மர்ம பொருள் பற்றி தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மர்ம பொருள் வெடித்ததால் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டோ, வெடிப்பொருட்களோ வெடிக்கவில்லை என்று முதற்கட்டமாக தெரியவந்தது. இதனை தடயவியல் நிபுணர்களும் உறுதி செய்தனர். அதே நேரத்தில் ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ரசாயனம் இருந்ததும், அது தான் வெடித்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதினார்கள். அதுகுறித்து நிபுணர்கள் விசாரித்தனர்.

அப்போது பலியான வெங்கடேஷ் நீல நிறத்தால் ஆன டப்பாவில் ரசாயனத்தை எடுத்து சென்றது தெரிந்தது. அந்த ரசாயனம், வீட்டு கதவுகளை பல்வேறு விதமாக அழகுபடுத்துவதற்கும், பிளாஸ்டிக்கை உருக்குவதற்காக பயன்படுத்துவதும் தெரிகிறது. ஆனால் ரசாயனம் வெடித்ததற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. மேலும் ரசாயனத்தை தனது வீட்டில் வெங்கடேஷ் எதற்காக வைத்திருந்தார், அதனை எங்கு எடுத்து சென்றார்? என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் வெங்கடேஷ் எடுத்து சென்ற ரசாயனம் காலாவதியாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக், ரசாயனம், பிற பொருட்களை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடயவியல் அறிக்கை வந்த பிறகு தான், எதற்காக பிளாஸ்டிக்கில் இருந்த ரசாயனம் வெடித்தது, எந்த வகையான ரசாயனத்தை வெங்கடேஷ் எடுத்து சென்றார் என்பது உள்ளிட்டவை தெரியவரும் என்று மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவையில்லை என்றும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

மர்ம பொருள் வெடித்து வெங்கடேஷ் பலியானதும், அவரது உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த பின்பே, அவரது உடலை பார்க்க உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் பெங்களூருவில் நேற்று பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com