தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதில் தெளிவாக உள்ளது; மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதில் தெளிவாக உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார்.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
Published on

விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

வாய்ப்பில்லை

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

அவரது கொள்கை என்ன என்பது தெரியாமல் விமர்சிக்க விரும்பவில்லை. பா.ஜனதாவின் மறைமுகம் என்று சொல்வதை ஏற்பதற்கு இல்லை. தமிழகத்தை பொறுத்தமட்டில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இருப்பது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது.

பிரசாரம்

மதசார்பற்ற கூட்டணியில் காங்கிரசின் பங்கு குறிப்பிடத்தகுந்த வகையில் இருக்கும். வருகிற சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றிபெற காங்கிரஸ் பணிகளை மேற்கொள்ளும்.

சமீபத்தில் ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேசுகையில் இதை உறுதி செய்துள்ளார்.

எனவே ரஜினிகாந்த் உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல் காந்தி தமிழகம் வருகை தர உள்ளார். அவர் வருகையை ஒட்டி பிரச்சார பணிகளை மேற்கொள்வது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி முடிவு எடுத்தவுடன் அவர் தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்காக பிரசாரம் மேற்கொள்வார்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆதரவாகத்தான் உள்ளது. விரைவாக மத்திய அரசு குழுவை அனுப்பி நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சி பாதிப்புள்ள விருதுநகர் மாவட்டத்தில் பலத்த சேதம் அடைந்த நிலையில் பிற மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீட்டு உரிய நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி பெறும்

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி வந்த பின்பு தான் விவசாய சட்ட திருத்தங்களுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறுவதில் காங்கிரசின் பங்களிப்பு பெருமளவில் இருக்கும். இம்மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெறும். அம்பேத்கரின் நினைவு நாளில் அவர் வகுத்த அரசியல் சட்டத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலனை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க சபதம் ஏற்போம். தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிந்தேன். அவர் விரைவில் குணம் அடைய வேண்டுகிறேன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com