கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கவலைப்பட வேண்டாம் எடியூரப்பா சொல்கிறார்

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் என்றும், காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் கவலைப் பட வேண்டாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கவலைப்பட வேண்டாம் எடியூரப்பா சொல்கிறார்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுஒருபுறம் இருக்க பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை திட்டத்திற்கு பயந்து காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது.

இந்த நிலையில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலையில் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்த பிறகு எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்களது எம்.எல்.ஏ.க்களை ஓட்டல்களில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பும்படி உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அனைவரும் பெங்களூருவுக்கு திரும்பி வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. அதில், கவனம் செலுத்தும்படி எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படியும் எம்.எல்.ஏ.க்களிடம் கூறியுள்ளேன்.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா இதுவரை நினைக்கவில்லை. அதுபற்றி பல முறை நான் கூறிவிட்டேன். கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டும் கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம்.

பா.ஜனதா சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படும். எங்களது வேலை வறட்சி பாதித்த தாலுகாக்களில் கவனம் செலுத்துவது மட்டுமே. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா நினைக்கவில்லை. அதனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடுமோ? என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கவலைப்பட வேண்டாம்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 20 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் முழு கவனம் செலுத்துவோம். நீங்கள் (நிருபர்கள்) எனது வீட்டுக்கு வர வேண்டாம். ஏதாவது முக்கிய தகவல் இருந்தால் நானே உங்களை அழைத்து பேசுகிறேன். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று கூறியுள்ள எடியூரப்பாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம், அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) தலைவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் எடியூரப்பா கூறியுள்ளார். எடியூரப்பா தான் சொன்னபடி நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com