குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மைசூருவில் காங்கிரசார், முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மைசூருவில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரசார், முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி மைசூருவில் காங்கிரசார், முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

மைசூரு,

மைசூருவில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரி காங்கிரசார், முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மைசூருவில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மைசூரு டவுன் ஹால் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மைசூரு மேயர் புஷ்பலதா ஜெகன்நாத், முன்னாள் மேயர்கள் புருஷோத்தம், அனந்து, நாராயணன், பிரகாஷ், அயூப்கான் உள்பட காங்கிரஸ் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்பினர், தலித் சங்கத்தினர், கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக அவர்கள் மைசூரு டவுனில் பேரணி நடத்தினர். மைசூரு டவுனில் உள்ள மணிக்கூண்டு சாலை, அசோகா ரோடு, பெங்களூரு - நீலகிரி சாலை உள்பட பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக அவர்கள் பேரணியாக வந்தனர். அப்போது அவர்கள் கைகளில் தேசியக்கொடிகளையும், கன்னட கொடிகளையும் ஏந்தி இருந்தனர். மேலும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். மேலும் அவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்கள் கைகளில் கருப்பு துணிகளை கட்டியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com