கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

சென்னை துறைமுகங்களில் வாடகைக்கு அமர்த்தப்படும் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Published on

திருவொற்றியூர்,

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் சரக்குகளை கையாள சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட தனியார் சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன.

சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சரக்கு பெட்டக நிலையங்களில் சுங்கத்துறை ஆய்வுக்கு பின் கன்டெய்னர்களை துறைமுகத்திற்கு எடுத்து செல்லவும், இறக்குமதி செய்யப்பட்ட கன்டெய்னர்களை சரக்குபெட்டக நிலையங்களுக்கு எடுத்து வரவும் கன்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கன்டெய்னர் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பும், சரக்கு பெட்டக நிலைய உரிமையாளர்கள் சங்கமும் கடந்த 2014-ம் ஆண்டு வாடகை குறித்து ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

சரக்கு பெட்டக முனையங்கள் கன்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு உயர்த்தப்பட்ட வாடகையுடன் 20 சதவீத கூடுதல் வாடகை கொடுக்கவேண்டும். சரக்கு எடுத்து சென்று ரசீது கொடுத்த 15 நாட்களுக்குள் வாடகை பணத்தை கொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு சரக்கு பெட்டகங்களும் 20 கன்டெய்னர் லாரிகளுக்கு மேல் இயக்கக்கூடாது என்பன அந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இந்நிலையில், சரக்கு பெட்டக முனையங்கள் இந்த ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே ஒப்பந்த நடைமுறையை செயல்படுத்தவும், வாடகையை உயர்த்தி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தவும் சரக்கு பெட்டக முனையங்கள் முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து கன்டெய்னர் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நேற்று காலை 6 மணி முதல் தொடங்கியது. இதனையடுத்து கன்டெய்னர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

கன்டெய்னர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும் எண்ணூர் கடற்கரைசாலை, மணலி உள் வட்டசாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. கன்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தத்தால் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com