

விராலிமலை,
விராலிமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் தினமும் கிராமம், கிராமமாக சென்று வாக்குசேகரித்து வருகிறார். நேற்று மீனவேலி, அகரப்பட்டி, லஞ்சமேடு, கசவனூர், தேங்காய்திண்ணிப்பட்டி, பொய்யாமணி, கொடும்பாளுர், விருதாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
அப்போது விஜயபாஸ்கர் பேசியதாவது:-
எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விராலிமலை தொகுதிக்கு உழைத்துக்கொண்டே இருப்பேன். இந்த தேர்தலின்போது யார் வேண்டுமானாலும் வருவார்கள். உங்கள் கை, காலில் விழுந்தும் கண்ணீர்விட்டும் ஓட்டு கேட்பார்கள். அவர்களிடம் நீங்கள் எங்களுக்கு உழைப்பதற்காக எங்கள் பிள்ளை இருக்கிறார். எங்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறார், எப்போதும் கொடுத்து கொண்டே இருப்பார் என்று கூறுங்கள். (அப்போது அங்கிருந்த மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் எங்களுக்கு சுய உதவிகுழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல திட்டங்களை செய்துள்ளீர்கள் மேலும் இலவசமாக 6 சிலிண்டர்கள் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் காங்கிரீட் வீடுகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதாக அறிவித்துள்ளீர்கள் ஆகவே எப்போதும் எங்களது ஓட்டு உங்களுக்குத்தான் (இரட்டை இலை) ஓட்டு போடுவோம் என்று கூறி கோசங்கள் போட்டனர்).
இந்த தொகுதி மக்களுக்காக என்னையவே எழுதி கொடுப்பேன் ஏன் என்னையே பட்டா போட்டு கொடுப்பேன். இந்த பிள்ளை நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கிறது. கண் தெரியாதவர்களுக்கு கண்ணாடியாக வருவேன், கால் இல்லாதவர்களுக்கு மூன்று சக்கர வாகனமாக வருவேன், காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் எந்திரமாக வருவேன், இந்த பிள்ளை பொங்கலுக்கு சீராக வருவேன், இருட்டில் வெளிச்சமாக இருப்பேன்.
இந்த பிள்ளை நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையெல்லாம் செய்யும், எதையும் செய்யவில்லை என்றாலும் காதை திருகி நீங்கள் இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். ஆகவே உங்கள் கையை பிடித்து தான் வந்துகொண்டிருக்கிறேன் நீங்கள் கைவிட்டு விடாதீர்கள். உங்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்திருக்கிறேன்.
எனக்கு பின்னால் நிறையபேர் பல கட்சியிலிருந்து ஓட்டு கேட்டு வருவார்கள், அவர்கள் எல்லாம் 5 நாட்களுக்கு ஓட்டு கேட்டு வருவார்கள் உங்கள் வீட்டு பிள்ளையான நான் மட்டும் எப்போதும் உங்களுடனே இருந்து உங்களுக்கு நிறைய செய்வேன். உங்களுக்கு கண்ணில் தண்ணீர் வராமல் உங்களுக்காக வியர்வை ரத்தம் சிந்துவது இந்த விஜயபாஸ்கர்தான். எனவே அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். இதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கரின் மகளும் தனது தந்தைக்கு வாக்குகள் சேகரித்தார்.