தொடர் மழை எதிரொலி: சென்னை புறநகர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தொடர் மழை எதிரொலி: சென்னை புறநகர் பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
Published on

தாம்பரம்,

சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம் பகுதிகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறதா? என பார்வையிட்ட அவர், சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்கள் மழைநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பெரிய அளவில் எங்கும் மழைநீர் தேக்கம் இல்லை. சிறியஅளவில் மழைநீர் தேங்கினாலும், அவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. அந்த ஏரிகளால் தாழ்வான பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஏரிகள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பி உள்ளன.

மழையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையும் மீறி தனியார் பள்ளிகள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பல்லாவரம் நகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற 30 மின்மோட்டார்கள், பொக்லைன் எந்திரங்களுடன் 24 மணிநேரமும் நகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக பல்லாவரம் நகராட்சி கமிஷனர் கருப்பையாராஜா தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com