நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: எமரால்டு அணை நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், எமரால்டு அணை நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: எமரால்டு அணை நிரம்பியது - விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டத்தில் 13 நீர்மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பர்பவானி, குந்தா, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மேற்கண்ட நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து இருந்தது. அதன்பிறகு தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் நீர்மட்டம் உயர்ந்து அப்பர்பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட அணைகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மின் உற்பத்தியும் சிறப்பாக நடைபெற்றது. அதன்பிறகு மழை ஓய்ந்தது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை கொட்டுகிறது. இதனால் அப்பர்பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகள் நிரம்பின. மேலும் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

இந்த நிலையில் 175 அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணை நிரம்பி உள்ளது. அணை முழுவதும் தண்ணீர் நிறைந்து கடல் போல காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com