மேல்மலையனூர், செஞ்சி பகுதியில் தொடர் மழை: 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை

மேல்மலையனூர், செஞ்சி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேல்மலையனூர், செஞ்சி பகுதியில் தொடர் மழை: 1,600 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை
Published on

மேல்மலையனூர்,

மேல்மலையனூர் பகுதிக்கு உட்பட்ட அவலூர்பேட்டை, தொரப்பாடி, சிறுதலைப்பூண்டி, தேவனூர், வளத்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்த பயிர்கள் அனைத்தும் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. சில விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து விட்டனர். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே இருந்தனர்.

இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேல்மலையனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்தது. இந்த மழையால் மேல்மலையனூர் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி அருகே உள்ள வயல்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் சிறுதலைப்பூண்டி, தேவனூர், தொரப்பாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை பார்த்து விவசாயிகள் கவலையடைந்ததோடு, கண்ணீர் விட்டு அழுதபடி விளை நிலங்களில் தேங்கிய நீரை வெளியேற்றி வருகின்ற னர்.

இதுகுறித்து சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மனைவியின் நகைகளை அடகு வைத்து 6 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து, பராமரித்து வந்தேன். பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. இதனால் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வீணாகி விட்டது. இதேபோல் மேல்மலையனூர் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு நிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் மழைவெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றார்.

இதேபோல் செஞ்சி பகுதியில் பெய்த தொடர்மழையால் சோகுப்பம் பெரிய ஏரி நிரம்பியது. மேலும் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கால்வாய் குறுகலாக கட்டப்பட்டுள்ளது. இதனால் உபரிநீர் செல்ல வழியின்றி விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. அதனால் கால்வாயின் அகலத்தை விரிவுபடுத்தி கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com