

ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் ஒன்றியக்குழு 15-வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கநாடு கீழையூர் மற்றும் காவராப்பட்டு ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்குரிய சின்னங்கள் விவர பட்டியல் வரிசை அடிப்படையில் வாக்கு சாவடிகளின் முகப்பில் ஒட்டப்பட்டு இருந்தது.
இந்த விவர பட்டியலில் இருந்த சின்னங்கள் வரிசைக்கும், வாக்களிக்கும் வாக்குச்சீட்டில் அச்சடிக்கப்பட்ட சின்னங்கள் வரிசைக்கும் முரண்பாடு இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தி.மு.க. வேட்பாளர் உள்ளிட்டோர் பணியில் இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்குப்பதிவை உடனடியாக நிறுத்துமாறு கூறினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
வாக்குவாதம்
இது குறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ.ராமச்சந்திரன், தி.மு.க ஒன்றிய செயலாளர் மு.காந்தி மற்றும் தி.மு.க.வினர், ஒக்கநாடு கீழையூர் மற்றும் காவராப்பட்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கர், ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்ட வேட்பாளர்களும், அவர்களது ஆதரவாளர்களும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்
இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களின் முகப்பில் ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர்கள் விவர பட்டியலில் இருந்த சின்னங்களின் வரிசை முரண்பாடுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
சின்னங்கள் வரிசையில் இருந்த முரண்பாடு காரணமாக ஒக்கநாடு கீழையூர் மற்றும் காவராப்பட்டு ஆகிய வாக்கு சாவடி மையங்களில் சுமார் 2 மணி நேரம் வாக்கு பதிவு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.